Wednesday, 17 June 2020

தேவனிடத்தில் எதை எப்படி கேட்டால் அதை நமக்கு தருவார்?


நம் அனைவருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு வசனம்.

ஆனால் பலருக்கு வரும் கேள்வி, வசனம் இப்படி சொல்லியிருக்க, நான் கேட்கிறது மட்டும் தேவன் ஏன் எனக்கு தருவதில்லை? நான் ஆசைப்பட்ட காரியங்களை தேவன் ஏன் நிறைவேற்றி வைக்கிறதில்லை? இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டு மனம் நொந்து போனவர்களும் உண்டு, கேட்டு பெறவில்லை என்கிற விரக்தியில் தேவனை மறுதலிக்கிறவர்களும் உண்டு.நம்மில் பலர் இந்த வசனத்தை ஆராயாமல், கருப்பொருளை அறியாமல், அப்படியே எடுத்துக் கொள்வதால் தான் அந்த ஏமாற்றத்திற்கு காரணம். மேலோட்டமாக வாசித்தால், வர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எதைக்கேட்டாலும் நான் செய்வேன் என்று தேவன் சொல்லியிருக்காரே என்று வாதிடலாம்.ஒரு தொழிலதிபர், ஒரு பெரிய பலசரக்கு விற்பனையாளரிடம் (சூப்பர் மால்) தன் இளம் மகனை அழைத்துக்கொண்டு போய், உனக்கு என்ன வேண்டுமென்றாலும் கேள், அதை நான் வாங்கித்தருகிறேன் என்று சொன்னார். அந்த மகன் அப்படியே சுற்றி பார்த்துவிட்டு தனக்கு ஒரு கொடிய துப்பாக்கி வேண்டும் என்று கேட்டான்.அவனுடைய தந்தை உடனே அவனுக்கு வாங்கி கொடுத்திருப்பார் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. அது அவனுக்கு தகுதியுடையது அல்லவே! அந்த சிறிய வயதில் அவனுக்கு அது தேவையற்றது. சட்டமும் அனுமதிக்காது, அவனால் அதை பயன்படுத்தவும் முடியாது.அதே போல் தான், வசனத்தில் எதை கேட்டாலும் என்ற சொல்லுக்கு பின்னால் தேவன் சில காரியங்களை வைத்திருக்கிறார்.

1. தேவ நாமம் மகிமைப்பட வேண்டும்.

யோவான் 14:13 வசனம் சொல்கிறதாவது: “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.”நாம் கேட்கும் காரியம் முதலாவது தேவனுடைய நாமம் மகிமைப்படுவதற்கு ஏதுவானதாக இருக்கவேண்டும். நல்ல படிப்பு வேண்டும் என்று கேட்கும் நாம், மதிப்பெண் கிடைத்தவுடன் தேவனுடைய நாமத்தை நாம் மகிமைபடுத்துகிறவராக இருக்க வேண்டும். நல்ல பாடல் திறமையை கேட்டால், அதினால் தேவனுக்குரிய பாடல் பாடி, தேவன் படைத்த ஜனங்களை தேவனிடம் கூட்டி சேர்ப்பவராக இருக்க வேண்டும்.


2. தேவனிடத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

யோவான் 15:7 வசனம் இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.”நாம் தேவனை சாராத ஒரு உலக பிரகாரமாக வாழ்ந்து கொண்டு, ஒரு தேவை என்று வருகிறபொழுது மட்டும் தேவனை நோக்கி கூப்பிட்டால், அவர் நமக்கு எப்படி உதவி செய்ய முடியும்? தேவன் நமக்கு கற்பித்த கட்டளைகளை ஒன்றையும் கடைப்பிடிக்காமல், தேவையான சமயம் மட்டும் தேவனை பார்த்து எனக்கு இதை செய்யும், அதை செய்யும் என்றால் அவர் அப்படி நமக்கு வேண்டியதை செய்ய முடியும்?ஒரு பிள்ளை தாயையோ அல்லது தந்தையையோ சார்ந்திருந்து, அவர்களுக்கு அது செவிக்கொடுத்து நல்ல பிள்ளையாக இருக்கும்பொழுது, பெற்றோர் அது விருப்பப்பட்டதெல்லாம் அதற்கு வாங்கித்தருவார்களே. அது போலவே நம் தேவனும். அவரை சார்ந்து வாழ்ந்தால் தேவன் நமக்கு செவிக்கொடுக்கிறவராக இருப்பார்.

3. தேவனுக்காக கனி கொடுக்கிறவராக இருக்கவேண்டும்.

யோவான் 15:16ல் தேவன், “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” என்பதாக சொல்கிறார். நாம் தேவன் விரும்பும் கனியுடையவராக இருத்தல் வேண்டும்.இனிப்பான மாங்கனி அநேகருக்கு பிடிக்கும். ஆயினும் ஒரு புளிப்பான மாங்கனி இருந்தால், அதை விரும்புவாரில்லை. ஒரு கனி நாம் சாப்பிட வேண்டுமானால் அது நல்ல சதை நிறைந்ததாக, இனிப்புள்ளதாக, நார் இல்லாததாக, பழுதடையாத, சரியான பக்குவத்தில் பழுத்த பழத்தை நாம் விரும்புகிறோம். அது போலவே, நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தேவனும் விரும்புகிறார்.

  இதை,கலாத்தியர் 5:22, 23 வசனங்களில் தேவன் நமக்கு வெளிப்படுத்துகிறார்: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்”இந்த கனிகளை உடையவராக நாம் இருக்கிறோமா?

4. அக்கிரமசிந்தை கூடாது

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” என்று சங்கீதம் 66:18ல் தாவீது சொல்கிறான்.நாம் ஒரு அக்கிரமக்காராராக இருந்தாள் தேவன் எப்படி செவிக்கொடுப்பார்? அல்லது நாம் கேட்கிற காரியம் ஒரு அக்கிரம காரியத்தை செய்வதாக இருந்தால் தேவன் எப்படி அதை நிறைவேற்றுவார்?என்னுடைய எதிரி அழிய வேண்டும், அவன் ஒன்றும் இல்லாமல் போக வேண்டும், அவன் எல்லாவற்றையும் இழக்க வேண்டும் – இதை தேவன் செய்வதில்லை – சத்துருக்களையும் சிநேகிக்க நம்மை சொல்லியிருக்கிறாரே!

5. இச்சைகளை நிறைவேற்ற கேட்டல் கூடாது“

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” என்று யாக்கோபு 4:3 சொல்கிறது.தேவையில்லாத ஆடம்பர காரியத்தையோ அல்லது நமக்கு உகந்ததல்லாத இச்சைகளை நிறைவேற்ருக்கிற காரியத்தையோ அல்லது ஒரு உலக பிரகாரமான, தேவனுக்கு பிரியமில்லாத, தேவன் கட்டளையிடாத காரியத்தை என்ன தான் உபவாசமிருந்து கேட்டாலும் தேவன் அங்கீகரிப்பதில்லை. அப்படி செய்கிற விண்ணப்பம் வீணே!ஆகவே,“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்” – 1 யோவான் 5:14
நாம் எதை கேட்டாலும், இந்த காரியங்களின் அடிப்படையில் நம்மை உண்டாக்கியவரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டால், நாம் ஏற்ற வேளையில், நமக்கு உகந்த விதத்தில் தேவன் உச்சிதமானதை நமக்கு தர வல்லவராயிருக்கிறார்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

No comments:

Post a Comment

வசனம்