Wednesday, 17 June 2020

தேவனுடைய திட்டம்


*தேவனுடைய வழிகள்*
====================

*"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல. உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்"*
( ஏசாயா 55 : 8 ).

இளைஞன் ஒருவன், மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தான். பள்ளத்தாக்கிற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்று அவன் நினைத்தான். ஆனால் அவன் ஒரு மரத்தின் மீது போய் விழுந்தான். அதிலிருந்த ஒரு கொப்பைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தான். இருட்டான நேரம் என்பதால், கீழே இருப்பதை அவனால் பார்க்க முடியவில்லை. அருகில் யாராவது இருந்தால் தன்னைக் காப்பாற்ற வருமாறு சத்தமாக கூப்பிட்டான். அவன் சத்தம் கொடுத்த அடுத்த நிமிடத்தில், "நான் உன் தேவன், உன்னைக் காப்பாற்றும்படி உன் அருகில் இருக்கிறேன்" என்று அவனுக்கு ஒரு சத்தம் கேட்டது. அவனுக்கு மிகுந்த சந்தோசமும், நிம்மதியும் வந்தது. பரவாயில்லை! இவ்வளவு ஆபத்தான நேரத்திலும், கர்த்தர் தன்னை காப்பாற்றும்படி வந்திருக்கிறார் என்று நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டான். உடனே அந்த இளைஞன், "தேவனே! என்னைக் காப்பாற்ற உங்களால் முடியுமா?" என்று அவன் கேட்டான். "ஆம். உன்னை என்னால் காப்பாற்றமுடியும், அதற்காகவேதான், நான் இங்கு வந்திருக்கிறேன்" என்று தேவன் சொன்னார். அதற்கு அந்த இளைஞன், "மிக்க நன்றி, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அதற்கு தேவன், "உன் இரு கரங்களையும் வைத்து, கொப்பை இறுக பற்றிக் கொண்டிருக்கிறாய்
அல்லவா? அதனை இப்போது விட்டு விடு" என்றார். இப்படி ஒரு பதிலை அவன் எதிர்பார்க்கவே இல்லை. தன் கைகளை விட்டால், கீழே விழுந்து, பள்ளத்தாக்கில் மரித்துப் போவோம் என்று அவன்  நினைத்ததால், தேவன் சொன்னதை அவன் செய்யாமல், வேறு யாராவது தனக்கு உதவி செய்ய மாட்டார்களா? என மீண்டும் சத்தமிட ஆரம்பித்தான். உண்மையிலேயே, அவன் கையை விட்டிருந்தால், பத்திரமாக ரோட்டருகில் விழுந்திருப்பான். ஏனென்றால் அவன் தொங்கிக்கொண்டிருந்த மரம் பள்ளத்தாக்கில் இல்லை. ரோட்டோரமாகவே இருந்தது!

நாமும் பலசமயங்களில், தேவனை, அவரது உதவிக்காக நாடுகிறோம். ஆனால் அவர் தரும் வழியில், அவரிடமிருந்து, நாம் உதவிகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவதில் நமது மூளைக்கு எட்டியபடிதான், தேவன் நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அவருடைய வழிகளையும், திட்டங்களையும் நாம் ஏற்றுக் கொள்வதி்ல்லை! தேவனுடைய வழிகள் நம்முடைய வழிகளை விட எளிதாகத் தெரிந்தாலும், அவை உயர்ந்தவை. சிறந்தவை. ஆகவே, தேவன் நம் தேவைகளை சந்திக்க வைத்திருக்கும் வழிகளை, நாம், நம்ப வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருமுறை சீரிய படை தளபதி நாகமான், தன்னுடைய குஷ்டரோகத்தை நீக்கிக்
கொள்ளும்படியாக, இஸ்ரவேல் தேசத்திலிருந்த எலிசாவிடம்
வந்தான். எலிசா, தன் தேவனுடைய நாமத்தை தொழுது, தன் கையினால் குஷ்டம் இருந்த இடத்தை தடவி விடுவார், அப்பொழுது தனக்கு சுகம் கிடைக்கும் என நாகமான் நினைத்திருந்தான். ஆனால், எலிசாவோ, நாகமான் சற்றும் எதிர்பாராதவிதத்தில், நீ போய், யோர்தான் நதியில் ஏழு தரம் ஸ்நானம்பண்ணு என்று சொல்லி அனுப்பி விட்டார். ஆனால், நாகமான் அதை கொஞ்சமும் விரும்பவில்லை. யோர்தானை விட நல்ல நதிகள் எங்கள் நாட்டில் இருக்கிறது என்று கோபத்தோடு, தன் நாட்டிற்கு திரும்ப நினைத்தான். ஆனால்  அவனோடு வந்திருந்தவர்களின் வற்புறுத்தலின்பேரில், தீர்க்கதரிசி சொல்லியபடி, யோர்தான் நதியில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணினான். அப்பொழுது அவன் மாம்சம் மாறி, ஒரு குழந்தையின் மாம்சம் போல் ஆனது (2 இராஜா 5 : 1 -- 14 ).

*தேவனுடைய வழிகளை நம் வாழ்வில் ஏற்றுக் கொண்டால், மிகுந்த ஆசீர்வாதம் நமக்கு உண்டாகும். நம்முடைய வழிகளை விட தேவனுடைய வழிகள் உயர்ந்தவைகள். நம் வழிகள் தேவனுடைய வழிகள் அல்ல.*

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பராக. ஆமென்.

தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளுவது எப்படி?



முதலாவது பொதுவான, வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனுடைய சித்தத்தைக் குறித்துப் பார்ப்போம். 2பேதுரு 3:9ல் 

ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்பதே தேவனுடைய சித்தம் என்று வாசிக்கிறோம். ஆகவே ஒவ்வொரு மனிதரைக்குறித்தும் முதன்மையான தேவனுடைய சித்தம், அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே. நாம் அழிந்துபோகாமல் மனந்திரும்ப வேண்டுமென்பதே தேவனுடைய சித்தம். ஆகவே தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள முற்படுமுன் உங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி, நான் இரட்சிக்கப்பட்டிருகிறேனா? என்பதே. ஏனெனில் தேவனுடனான உறவில் இது முதல் படி. இரட்சிக்கப்படாத ஒவ்வொருவரும் தேவனுக்கு பகைஞராயிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயேசு கிறிஸ்து மூலமாக தேவனிடத்தில் நீங்கள் சமாதானமாகவில்லை என்றால், உங்களுக்கும் தேவனுக்கும் எந்த உறவும் இல்லை, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளத் தேவையும் இல்லை. அது ராஜாதி ராஜாவாகிய தேவனுக்கும் அவருடைய பிள்ளைகளுக்கும் சொந்தமானது, இரட்சிக்கப்படாதவர்களுக்கல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை தேவனின் ஆளுகைக்கு முழுமையாக அற்பணிக்கவில்லை என்றால், அவருடைய சித்தத்தை கேட்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆகவே நீங்கள் உங்களைக் கேட்க வேண்டிய முதலாவது கேள்வி, இரட்சிக்கப்படவேண்டும் என்ற தேவனுடைய சித்தத்திற்கு நீங்கள் கீழ்படிந்திருக்கிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால், அந்த பதில் வேதவாக்கியங்களின் அடிப்படையில் இருக்குமென்றால், உங்கள் கனிகளினால் அது உறுதிப்படுமென்றால், இரட்சிப்பை பொறுத்தமட்டில் நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்.

இரண்டாவதாக, ஒவ்வொரு மனிதரைக்குறித்தும் பொதுவான தேவனுடைய சித்தம் என்னவென்றால், ஆவியில் நிறைந்திருப்பது. எபே 5:17-18 வசனங்களில், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்தவர்களாயிருங்கள் என்று வாசிக்கிறோம். எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ளவில்லை என்றால் வேதப்புத்தகம் உங்களை மதியற்றவர்கள் என்று அழைக்கிறது. ஆகவே ஒரு தேவனுடைய பிள்ளை, இயல்பாகவே தேவனுடைய சித்தத்தை அறிந்தவனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் தேவனுடைய சித்தம் 18ம் வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆவியில் நிறைந்திருங்கள் என்றால் என்ன அர்த்தம்? இன்று பெந்தேக்கோஸ்தே வட்டாரங்களில் சொல்லப்படுவதுபோல், ஆவியில் நிறைதல் என்றால், அந்நியபாஷை என்ற பெயரில் கத்தி உருண்டு பிரண்டு அமர்களப்படுத்துவதல்ல! ஏனென்றால் நீங்கள் விசுவாசிகளானபோதே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவரால் முத்திரைபோடப்பட்டீர்கள் என்றும், பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாழ்கிறார் என்றும் நீங்களே பரிசுத்த ஆலயம் என்றும் வேத வசனம் சொல்லுகிறது. அப்படியானால் ஏற்கனவே விசுவாசிகளாயிருக்கிற எபேசியர்களுக்கு பவுல் ஏன் ஆவியில் நிறைந்தவர்களாயிருங்கள் என்று சொல்லுகிறார்? எபேசியர்கள் அவிசுவாசிகளாயிருந்த நாட்களில் குடித்து வெறித்து மதுபான வெறிக்கொண்டிருக்கையில் தங்கள் தேவதையான டயானாவில் ஆலயத்தில் பிரவேசித்து, தங்கள் தேவதையை ஆராதித்தார்கள். அப்பொழுது அவர்கள் மதுபானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். இப்பொழுது இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். குடித்து வெறிகாமல் பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பட்டின் கீழ் வாருங்கள் என்று சொல்லுகிறார். ஆவியில் நிறைதல் என்றால் முழுமையாக பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதைக் குறிக்கிறது.

அப்படியானால் பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படுதல் அல்லது வழி நடத்தப்படுதல் என்றால் என்ன? வேதவாக்கியங்களெல்லாம் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு என்பதை அறிந்திருக்கிறோம். ஆகவே பரிசுத்த ஆவியானவரால் வழி நடத்தப்படுதல், கட்டுப்படுத்தப்படுதல் அல்லது பரிசுத்த ஆவியால் நிறைதல் என்பது தேவனுடைய வார்த்தையினால், வேதவசனத்தினால் நடத்தப்படுதல் என்பதையே குறிக்கிறது. பரிசுத்த ஆவியால் நிறைந்திருக்கும்பொழுது என்ன நடக்கிறது? அதே அதிகாரத்தை தொடர்ந்து வாசித்தால், ஆவியின் கனிகள் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதை நீங்களும் காணலாம் மற்றவர்களும் காண்பார்கள். மற்றவர்களுடனான உங்கள் உறவு மேம்படும், உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் உறவு மேம்படும். தேவனுடனான உங்கள் உறவு புதிய பரிமாணத்தை பெறும். உங்கள் கனிகளினால் அநேகரை ஆத்தும ஆதாயம் செய்வீர்கள். இவைகளெல்லாம் ஆவியில் நிறைந்திருப்பதற்கான ஆதாரங்கள். ஆவியின் கனிகளை கொலோ 3:16ம் வசனமுதல், கலாத் 5:22,23ம் வசனங்களில் காணலாம். இதுவே உங்களைக்குறித்த தேவனின் வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தமாயிருக்கிறது. ஆகவே இத்தருணத்தில் நீங்கள் கெட்க வேண்டிய முக்கியமான கேள்வி, உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துவது எது? தேவனுடைய வார்த்தையா அல்லது உங்கள் சொந்த விருப்பங்களா? நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் வேத வசனத்தின் அடிப்படையில் சோதித்துப்பார்த்து, இதை தேவன் அனுமதிக்கிறாரா என்பதை உறுதி செய்கிறீர்களா? நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தேவனின் வார்த்தைக்கு ஒத்துப்போகவில்லை என்றால் அது தேவனுடைய சித்தமல்ல. இந்தக் கேள்விகள் நீங்கள் மற்றவர்களுக்கு பதிலளிக்க வேண்டியவைகல்ல. உங்களுக்கு நீங்களே பதிலளித்துக்கொள்ள வேண்டியவை. நீங்கள் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிறைந்திருப்பீர்கள் என்றால், நீங்கள் தேவனுடைய சித்தத்தின் அடிப்படையில் வாழ்கிறீர்கள்.

மூன்றாவதாகநீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும் என்று 1தெச 4:3-5ல் வாசிக்கிறோம். நீங்கள் உலகத்திலுள்ள எல்லாவிதமான துன்மார்க்க இச்சைகளுக்கும் ஆசைகளுக்கும் விலகி தேவனை உண்மையும் உத்தமமும், பரிசுத்ததுடன் ஆராதிக்க வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. உண்மையாகவே நீங்கள் தேவனுடைய சித்தம் செய்ய வாஞ்சிப்பீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தத்திற்காக நீங்கள் சிரத்தையுடன் முயற்சி செய்வீர்கள். நீங்கள் தேவனின் பரிசுத்த ஆலயமாயிருக்கிறீர்கள். எங்கெல்லாம் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்கிறாரோ, அங்கெல்லாம் அவர் பரிசுத்தத்தை ஏற்படுத்துகிறார். நீதியின் மீது வாஞ்சையையும், பாவத்தின் மீது வெறுப்பையும் ஏற்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவரின் இந்த செயல் உங்கள் வாழ்க்கையில் நடைமுறையில் இருக்கிறதா? நான் இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவீர்கள் என்றால், அந்த விசுவாசம் உண்மையானது என்றால், அது செத்த விசுவாசமாயிருக்காது. அது தொடர்ந்து தன்னுடைய பணியை செய்யும். அது உங்கள் வாழ்க்கையை பரிசுத்தத்திற்கு நேராய் மாற்றும். இது உங்கள் வாழ்க்கையின் அனுபவமாயிராவிட்டால் உங்கள் அடிப்படை இரட்சிப்பிலேயே பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். ஏனென்றால் பணி செய்யாத விசுவாசம் செத்த விசுவாசம். ஆகவே உங்கள் வாழ்க்கையின் பரிசுத்தத்தைக்குறித்து இதுவே தேவனுடைய சித்தம்.

நான்காவதுஉங்கள் சொந்த சாட்சியுள்ள வாழ்க்கை

நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்று1பேது 2:15ல் வாசிக்கிறோம். இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள ‘நன்மை செய்தல்’ என்றால் என்ன என்பதை அறிந்துக்கொள்ள 12ம் வசனத்தில் இருந்து நீங்கள் படிக்க வேண்டும். அவிசுவாசிகளுக்கு முன்பாக பரிசுத்தமாக பேசுங்கள், அரசாங்கத்திற்கு கீழ்ப்படியுங்கள், அரசு அதிகாரிகளுக்கு கீழ்ப்படியுங்கள், மற்றவர்களை கனம்பண்ணுங்கள், சகோதரரை சினேகியுங்கள், இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்திய மன்னிப்பு, உங்கள் வாழ்க்கையின் மூலமாக வெளிப்பட வேண்டும். இவைகளெல்லாம் மற்றவர்களுக்கு முன்பாக உங்கள் சாட்சியுடன் சம்மந்தப்பட்டது. இந்த நற்செயல்களினால் நீங்கள் புத்தியீன மனிதருடைய அறியாமையை அடக்க வேண்டும். இது உங்களைக்குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது. உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? உங்கள் வாழ்க்கையைப்பார்த்து மற்றவர்கள் தேவனை தூஷிக்கிறார்களா? அல்லது துதிக்கிறார்களா?

ஐந்தாவதுஉங்கள் இருதயத்தின் எண்ணப்போக்கு

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது (2தெச 5:16-18). எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் என்பது, தேவனுடைய கரத்திலிருந்து வரும் எந்த ஒன்றையும் நீங்கள் மகிழ்ச்சியாய் பெற்றுக்கொள்ளுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. உங்கள் வெளிபுற சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தேவனுடனான உறவில் உங்கள் இருதயம் மகிழும். இது உங்கள் இருதயத்தின் மனப்போக்குடன் நேரடியாக தொடர்புள்ளது. இடைவிடாமல் ஜெபம்பண்ணுதல் என்பது என் சுய புத்தியின் மேல் சாராமல், என் முழு இருதயத்தோடும் நான் தேவனை விசுவாசிக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவதைக் குறிக்கிறது. என் வழிகள் எல்லாவற்றையும் நான் தேவனிடத்தில் ஒப்புவிக்கிறேன், அவர் என் பாதைகளை செவ்வைப்படுத்துவார். எல்லாவற்றிலும் ஸ்தோதிரம் செய்தல் என்பதும் தேவனுடனான உங்கள் இருதயத்தின் மனப்போக்கை குறிக்கிறது. ஏனென்றால் சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருக்கும்பொழுது, நீங்கள் விரும்பியவை கிடைக்காமல் இருக்கும்பொழுது, உங்களுக்கு பிரியமானவர்கள் தேவனுடைய சித்தத்தினால் எடுத்துக்கொள்ளப்பட்டபொழுது, முறுமுறுப்பதும் தேவனிடத்தில் கோபித்துக்கொள்ளுவதும் இயற்கையானதே. ஆனால் கர்த்தர் கொடுத்தார்; கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்; என்று சொல்லுவது முற்றிலும் இயற்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால் இதுவே உங்களைக்குறித்த தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

தேவனிடத்தில் எதை எப்படி கேட்டால் அதை நமக்கு தருவார்?


நம் அனைவருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு வசனம்.

ஆனால் பலருக்கு வரும் கேள்வி, வசனம் இப்படி சொல்லியிருக்க, நான் கேட்கிறது மட்டும் தேவன் ஏன் எனக்கு தருவதில்லை? நான் ஆசைப்பட்ட காரியங்களை தேவன் ஏன் நிறைவேற்றி வைக்கிறதில்லை? இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டு மனம் நொந்து போனவர்களும் உண்டு, கேட்டு பெறவில்லை என்கிற விரக்தியில் தேவனை மறுதலிக்கிறவர்களும் உண்டு.நம்மில் பலர் இந்த வசனத்தை ஆராயாமல், கருப்பொருளை அறியாமல், அப்படியே எடுத்துக் கொள்வதால் தான் அந்த ஏமாற்றத்திற்கு காரணம். மேலோட்டமாக வாசித்தால், வர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே எதைக்கேட்டாலும் நான் செய்வேன் என்று தேவன் சொல்லியிருக்காரே என்று வாதிடலாம்.ஒரு தொழிலதிபர், ஒரு பெரிய பலசரக்கு விற்பனையாளரிடம் (சூப்பர் மால்) தன் இளம் மகனை அழைத்துக்கொண்டு போய், உனக்கு என்ன வேண்டுமென்றாலும் கேள், அதை நான் வாங்கித்தருகிறேன் என்று சொன்னார். அந்த மகன் அப்படியே சுற்றி பார்த்துவிட்டு தனக்கு ஒரு கொடிய துப்பாக்கி வேண்டும் என்று கேட்டான்.அவனுடைய தந்தை உடனே அவனுக்கு வாங்கி கொடுத்திருப்பார் என்று எண்ணுகிறீர்களா? இல்லை. அது அவனுக்கு தகுதியுடையது அல்லவே! அந்த சிறிய வயதில் அவனுக்கு அது தேவையற்றது. சட்டமும் அனுமதிக்காது, அவனால் அதை பயன்படுத்தவும் முடியாது.அதே போல் தான், வசனத்தில் எதை கேட்டாலும் என்ற சொல்லுக்கு பின்னால் தேவன் சில காரியங்களை வைத்திருக்கிறார்.

1. தேவ நாமம் மகிமைப்பட வேண்டும்.

யோவான் 14:13 வசனம் சொல்கிறதாவது: “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.”நாம் கேட்கும் காரியம் முதலாவது தேவனுடைய நாமம் மகிமைப்படுவதற்கு ஏதுவானதாக இருக்கவேண்டும். நல்ல படிப்பு வேண்டும் என்று கேட்கும் நாம், மதிப்பெண் கிடைத்தவுடன் தேவனுடைய நாமத்தை நாம் மகிமைபடுத்துகிறவராக இருக்க வேண்டும். நல்ல பாடல் திறமையை கேட்டால், அதினால் தேவனுக்குரிய பாடல் பாடி, தேவன் படைத்த ஜனங்களை தேவனிடம் கூட்டி சேர்ப்பவராக இருக்க வேண்டும்.


2. தேவனிடத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

யோவான் 15:7 வசனம் இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.”நாம் தேவனை சாராத ஒரு உலக பிரகாரமாக வாழ்ந்து கொண்டு, ஒரு தேவை என்று வருகிறபொழுது மட்டும் தேவனை நோக்கி கூப்பிட்டால், அவர் நமக்கு எப்படி உதவி செய்ய முடியும்? தேவன் நமக்கு கற்பித்த கட்டளைகளை ஒன்றையும் கடைப்பிடிக்காமல், தேவையான சமயம் மட்டும் தேவனை பார்த்து எனக்கு இதை செய்யும், அதை செய்யும் என்றால் அவர் அப்படி நமக்கு வேண்டியதை செய்ய முடியும்?ஒரு பிள்ளை தாயையோ அல்லது தந்தையையோ சார்ந்திருந்து, அவர்களுக்கு அது செவிக்கொடுத்து நல்ல பிள்ளையாக இருக்கும்பொழுது, பெற்றோர் அது விருப்பப்பட்டதெல்லாம் அதற்கு வாங்கித்தருவார்களே. அது போலவே நம் தேவனும். அவரை சார்ந்து வாழ்ந்தால் தேவன் நமக்கு செவிக்கொடுக்கிறவராக இருப்பார்.

3. தேவனுக்காக கனி கொடுக்கிறவராக இருக்கவேண்டும்.

யோவான் 15:16ல் தேவன், “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுகொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” என்பதாக சொல்கிறார். நாம் தேவன் விரும்பும் கனியுடையவராக இருத்தல் வேண்டும்.இனிப்பான மாங்கனி அநேகருக்கு பிடிக்கும். ஆயினும் ஒரு புளிப்பான மாங்கனி இருந்தால், அதை விரும்புவாரில்லை. ஒரு கனி நாம் சாப்பிட வேண்டுமானால் அது நல்ல சதை நிறைந்ததாக, இனிப்புள்ளதாக, நார் இல்லாததாக, பழுதடையாத, சரியான பக்குவத்தில் பழுத்த பழத்தை நாம் விரும்புகிறோம். அது போலவே, நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தேவனும் விரும்புகிறார்.

  இதை,கலாத்தியர் 5:22, 23 வசனங்களில் தேவன் நமக்கு வெளிப்படுத்துகிறார்: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்”இந்த கனிகளை உடையவராக நாம் இருக்கிறோமா?

4. அக்கிரமசிந்தை கூடாது

என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” என்று சங்கீதம் 66:18ல் தாவீது சொல்கிறான்.நாம் ஒரு அக்கிரமக்காராராக இருந்தாள் தேவன் எப்படி செவிக்கொடுப்பார்? அல்லது நாம் கேட்கிற காரியம் ஒரு அக்கிரம காரியத்தை செய்வதாக இருந்தால் தேவன் எப்படி அதை நிறைவேற்றுவார்?என்னுடைய எதிரி அழிய வேண்டும், அவன் ஒன்றும் இல்லாமல் போக வேண்டும், அவன் எல்லாவற்றையும் இழக்க வேண்டும் – இதை தேவன் செய்வதில்லை – சத்துருக்களையும் சிநேகிக்க நம்மை சொல்லியிருக்கிறாரே!

5. இச்சைகளை நிறைவேற்ற கேட்டல் கூடாது“

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” என்று யாக்கோபு 4:3 சொல்கிறது.தேவையில்லாத ஆடம்பர காரியத்தையோ அல்லது நமக்கு உகந்ததல்லாத இச்சைகளை நிறைவேற்ருக்கிற காரியத்தையோ அல்லது ஒரு உலக பிரகாரமான, தேவனுக்கு பிரியமில்லாத, தேவன் கட்டளையிடாத காரியத்தை என்ன தான் உபவாசமிருந்து கேட்டாலும் தேவன் அங்கீகரிப்பதில்லை. அப்படி செய்கிற விண்ணப்பம் வீணே!ஆகவே,“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்” – 1 யோவான் 5:14
நாம் எதை கேட்டாலும், இந்த காரியங்களின் அடிப்படையில் நம்மை உண்டாக்கியவரான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டால், நாம் ஏற்ற வேளையில், நமக்கு உகந்த விதத்தில் தேவன் உச்சிதமானதை நமக்கு தர வல்லவராயிருக்கிறார்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

வசனம்